1 Chronicles 12 in Tamil
1 நாளாகமம் 12
Please click a verse to start collecting
1 தாவீது கீசின் குமாரனாகிய சவுலினிமித்தம் இன்னும் மறைவாயிருக்கையில், சிக்லாகிலிருக்கிற அவனிடத்திற்கு வந்து,
2 யுத்தத்திற்கு ஒத்தாசை செய்த வில்வீரரும், கவண்கல் எறிகிறதற்கும் வில்லினால் அம்பு எய்கிறதற்கும் வலது இடது கைவாட்டமான பராக்கிரமசாலிகளான மற்ற மனுஷருமாவன: சவுலின் சகோதரராகிய பென்யமீன் கோத்திரத்தில்,
3 கிபேயா ஊரானாகிய சேமாவின் குமாரர் அகியேசர் என்னும் தலைவனும், யோவாசும், அஸ்மாவேத்தின் குமாரராகிய எசியேலும், பேலேத்தும், பெராக்கா, ஆனதோத்தியனான ஏகூ என்பவர்களும்,
4 முப்பதுபேரில் பராக்கிரமனும் முப்பதுபேருக்குப் பெரியவனுமான இஸ்மாயா என்னும் கிபியோனியனும், எரேமியா, யகாசியேல், யோகனான், கெதேரூரானான யோசபாத்,
5 எலுசாயி, எரிமோத், பிகலியா, அரியா, அருப்பியனான செப்பத்தியா,
6 எல்க்கானா, எஷியா, அசாரியேல், யொவேசேர், யசொபெயாம் என்னும் கோரேகியரும்,
7 யொவேலா, செபதியா என்னும் கேதோர் ஊரானான ஏரோகாமின் குமாரருமே.
8 காத்தியரில் பரிசையும் ஈட்டியும் பிடித்து, சிங்கமுகம் போன்ற முகமும், மலைகளிலிருக்கிற வெளிமான் வேகம்போன்ற வேகமுமுள்ளவர்களாயிருந்து, யுத்தசேவகரான பராக்கிரமசாலிகள் சிலரும் வனாந்தரத்திலுள்ள அரணான இடத்தில் இருக்கிற தாவீது பட்சமாய்ச் சேர்ந்தார்கள்.
9 யாரென்றால், எத்சேர் என்னும் தலைவன், அவனுக்கு இரண்டாவது ஒபதியா; மூன்றாவது எலியாப்,
10 நாலாவது மிஸ்மன்னா, ஐந்தாவது எரேமியா,
11 ஆறாவது அத்தாயி, ஏழாவது எலியேல்,
12 எட்டாவது யோகனான், ஒன்பதாவது எல்சபாத்,
13 பத்தாவது எரேமியா, பதினோரவது மக்பன்னாயி;
14 காத் புத்திரரான இவர்கள் இராணுவத்தலைவராயிருந்தார்கள்; அவர்களில் சிறியவன் நூறுபேருக்கும் பெரியவன் ஆயிரம்பேருக்கும் சேர்வைக்காரராயிருந்தார்கள்.
15 யோர்தான் கரைபுரண்டுபோயிருக்கிற முதலாம் மாதத்தில் அதைக் கடந்து, கிழக்கேயும் மேற்கேயும் பள்ளத்தாக்குகளில் இருக்கிற யாவரையும் துரத்திவிட்டவர்கள் இவர்களே.
16 பின்னும் பென்யமீன் புத்திரரிலும் யூதாபுத்திரரிலும் சிலர் அரணான ஸ்தலத்தில் இருக்கிற தாவீதினிடத்தில் வந்தார்கள்.
17 தாவீது புறப்பட்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களுக்கு உத்தரவுகொடுத்து: நீங்கள் எனக்கு உதவிசெய்ய சமாதானமாய் என்னிடத்தில் வந்தீர்களானால், என் இருதயம் உங்களோடு இசைந்திருக்கும்; என் கைகளில் கொடுமை இல்லாதிருக்க, என்னை என் சத்துருக்களுக்குக் காட்டிக்கொடுக்க வந்தீர்களேயாகில், நம்முடைய பிதாக்களின் தேவன் அதைப் பார்த்துக் கண்டிப்பாராக என்றான்.
18 அப்பொழுது அதிபதிகளுக்குத் தலைவனான அமாசாயின்மேல் ஆவி இறங்கினதினால், அவன்: தாவீதே, நாங்கள் உம்முடையவர்கள்; ஈசாயின் குமாரனே உமது பட்சமாயிருப்போம்; உமக்குச் சமாதானம், சமாதானம்; உமக்கு உதவிசெய்கிறவர்களுக்கும் சமாதானம்; உம்முடைய தேவன் உமக்குத் துணை நிற்கிறார் என்றான்; அப்பொழுது தாவீது அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களைத் தண்டுக்குத் தலைவராக்கினான்.
19 சவுலின்மேல் யுத்தம்பண்ணப்போகிற பெலிஸ்தருடனேகூடத் தாவீது வருகிறபோது, மனாசேயிலும் சிலர் அவன் பட்சமாய்ச் சேர்ந்தார்கள்; பெலிஸ்தரின் பிரபுக்கள் யோசனைபண்ணி, அவன் நம்முடைய தலைகளுக்கு மோசமாய்த் தன் ஆண்டவனாகிய சவுலின் பட்சமாய்ப் போவான் என்று அவனை அனுப்பிவிட்டார்கள்: அதனால் அவர்கள் இவர்களுக்கு உதவிசெய்யவில்லை.
20 அப்படியே அவன் சிக்லாகுக்குத் திரும்பிப்போகையில், மனாசேயில் அத்னாக், யோசபாத், எதியாவேல், மிகாயேல், யோசபாத், எலிகூ, சில்த்தாயி என்னும் மனாசே கோத்திரத்தாரின் ஆயிரத்துச் சேர்வைக்காரர் அவன் பட்சமாய் வந்தார்கள்.
21 அந்தத் தண்டுக்கு விரோதமாய் இவர்கள் தாவீதுக்கு உதவிசெய்தார்கள்; இவர்களெல்லாரும் பராக்கிரமசாலிகளும் இராணுவத்தில் சேர்வைக்காரருமாயிருந்தார்கள்.
22 அக்காலத்திலே நாளுக்குநாள் தாவீதுக்கு உதவிசெய்யும் மனுஷர் அவனிடத்தில் வந்து சேர்ந்தபடியால், அவர்கள் தேவசேனையைப்போல மகா சேனையானார்கள்.
23 கர்த்தருடைய வாக்கின்படியே, சவுலின் ராஜ்யபாரத்தைத் தாவீதினிடமாய்த் திருப்ப, எப்ரோனிலிருக்கிற அவனிடத்துக்கு வந்த யுத்த சன்னத்தரான தலைவரின் இலக்கமாவன:
24 யூதாபுத்திரரில் பரிசையும் ஈட்டியும் பிடித்து, யுத்தசன்னத்தரானவர்கள் ஆறாயிரத்து எண்ணூறுபேர்.
25 சிமியோன் புத்திரரில் பராக்கிரமசாலிகளாகிய யுத்தவீரர் ஏழாயிரத்து நூறுபேர்.
26 லேவி புத்திரரில் நாலாயிரத்து அறுநூறுபேர்.
27 ஆரோன் சந்ததியாரின் அதிபதியாகிய யோயதாவும், அவனோடிருந்த மூவாயிரத்து; எழுநூறுபேரும்,
28 பராக்கிரமசாலியான சாதோக் என்னும் வாலிபனும், அவன் தகப்பன் வம்சத்தாரான இருபத்திரண்டு தலைவருமே.
29 பென்யமீன் புத்திரரான சவுலின் சகோதரரில் மூவாயிரம்பேர்; அதுவரைக்கும் அவர்களில் மிச்சமானவர்கள் சவுலின் குடும்பத்தைக் காப்பாற்றப் பார்த்தார்கள்.
30 எப்பிராயீம் புத்திரரில் தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பேர் பெற்ற மனுஷரான பராக்கிரமசாலிகள் இருபதினாயிரத்து எண்ணூறுபேர்.
31 மனாசேயின் பாதிக்கோத்திரத்தில் தாவீதை ராஜாவாக்குகிறதற்கு வரும்படி, பேர்பேராகக் குறிக்கப்பட்டவர்கள் பதினெண்ணாயிரம்பேர்.
32 இசக்கார் புத்திரரில், இஸ்ரவேலர் செய்யவேண்டியது இன்னதென்று அறிந்து காலாகாலங்களுக்குத் தகுந்த யோசனை சொல்லத்தக்க தலைவர்கள் இருநூறுபேரும், இவர்கள் வாக்குக்குச் செவிகொடுத்த இவர்களுடைய எல்லாச் சகோதரருமே.
33 செபுலோன் புத்திரரில் சகலவித யுத்த ஆயுதங்களாலும் யுத்தம் செய்கிறதற்கும், தங்கள் அணியைக் காத்துநிற்கிறதற்கும் பழகி, வஞ்சனைசெய்யாமல் யுத்தத்திற்குப் போகத்தக்கவர்கள் ஐம்பதினாயிரம்பேர்.
34 நப்தலி புத்திரரில் ஆயிரம் தலைவர்கள் பரிசையும் ஈட்டியும் பிடித்த அவர்களோடேகூட இருந்தவர்கள் முப்பத்தேழாயிரம்பேர்.
35 தாண் புத்திரரில் யுத்தத்திற்குத் தேறினவர்கள் இருபத்து எண்ணாயிரத்து அறுநூறுபேர்.
36 ஆசேர் புத்திரரில் யுத்தத்திற்குத் தேறினவர்களாய் சேவகம்பண்ணப்போகத்தக்கவர்கள் நாற்பதினாயிரம்பேர்.
37 யோர்தானுக்கு அக்கரையான ரூபனியரிலும், காத்தியரிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரிலும், யுத்தம்பண்ண சகலவித ஆயுதங்களையும் தரித்தவர்கள் நூற்றிருபதினாயிரம்பேர்.
38 தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்குகிறதற்கு, இந்த யுத்தமனுஷர் எல்லாரும் அணி அணியாய் வைக்கப்பட்டவர்களாக, உத்தம இருதயத்தோடே எப்ரோனுக்கு வந்தார்கள்; இஸ்ரவேலில் மற்ற யாவரும் தாவீதை ராஜாவாக்குகிறதற்கு ஒருமனப்பட்டிருந்தார்கள்.
39 அவர்கள் அங்கே தாவீதோடேகூட மூன்றுநாள் இருந்து, போஜனபானம்பண்ணினார்கள்; அவர்கள் சகோதரர் அவர்களுக்காகச் சகலத்தையும் ஆயத்தம்பண்ணியிருந்தார்கள்.
40 இசக்கார், செபுலோன், நப்தலியின் எல்லைமட்டும் அவர்களுக்குச் சமீபமாயிருந்தவர்களும், கழுதைகள்மேலும் ஒட்டகங்கள்மேலும் கோவேறு கழுதைகள்மேலும் மாடுகள்மேலும், தின்பண்டங்களாகிய மா, அத்திப்பழ அடைகள், வற்றலான திராட்சப்பழங்கள், திராட்சரசம், எண்ணெய் ஆடுமாடுகள் ஆகிய இவைகளை வேண்டிய மட்டும் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்; இஸ்ரவேலிலே மகிழ்ச்சியுண்டாயிற்று.