Please click a verse to start collecting

1 இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன்.

2 மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்.

3 ஆயினும் நான் உங்களாலேயாவது மனுஷருடைய நியாயநாளின் விசாரணையினாலேயாவது தீர்ப்பைப்பெறுவது எனக்கு மிகவும் அற்ப காரியமாயிருக்கிறது; நானும் என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை.

4 என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே.

5 ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.

6 சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து, இவைகளை எழுதினேன்.

7 அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?

8 இப்பொழுது திருப்தியடைந்திருக்கிறீர்களே, இப்பொழுது ஐசுவரியவான்களாயிருக்கிறீர்களே, எங்களையல்லாமல் ஆளுகிறீர்களே; நீங்கள் ஆளுகிறவர்களானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உங்களுடனேகூட நாங்களும் ஆளுவோமே.

9 எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்.

10 நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர், நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனர், நீங்கள் பலவான்கள்; நீங்கள் கனவான்கள், நாங்கள் கனவீனர்.

11 இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம்.

12 எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம்.

13 தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம்; இந்நாள்வரைக்கும் உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானோம்.

14 உங்களை வெட்கப்படுத்தும்படிக்கு நான் இவைகளை எழுதவில்லை, நீங்கள் எனக்குப் பிரியமான பிள்ளைகளென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

15 கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தில் நான் உங்களைப் பெற்றேன்.

16 ஆகையால், என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்களென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

17 இதினிமித்தமாக, எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிறபிரகாரம் கிறிஸ்துவுக்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான்.

18 நான் உங்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதாகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள்.

19 ஆகிலும் கர்த்தருக்குச் சித்தமானால் நான் சீக்கிரமாய் உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய பேச்சையல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன்.

20 தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது.

21 உங்களுக்கு என்னவேண்டும்? நான் பிரம்போடு உங்களிடத்தில் வரவேண்டுமோ? அல்லது அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும் வரவேண்டுமோ?