Please click a verse to start collecting

1 பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையிலே எபூசியனாகிய ஒர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த ஸ்தலத்திலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டத்துவக்கினான்.

2 அவன் தான் ராஜ்யபாரம்பண்ணின நாலாம் வருஷம் இரண்டாம் மாதம் இரண்டாம் தேதியிலே கட்டத்தொடங்கினான்.

3 தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, சாலொமோன் போட்ட அஸ்திபாரமானது, முற்காலத்து அளவின்படியே அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமுமாயிருந்தது.

4 முகப்பு மண்டபம் ஆலயத்தினுடைய அகலத்தின்படியே இருபதுமுழ நீளமும், நூற்றிருபதுமுழ உயரமுமாயிருந்தது; அதின் உட்புறத்தைப் பசும்பொன்தகட்டால் முடினான்.

5 ஆலயத்தின் பெரியமாளிகையை தேவதாரு பலகைகளினால் செய்து பசும்பொன்னினால் இழைத்து, அதின்மேல் பேரீச்சுவேலையையும் சங்கிலிவேலையையும் சித்திரித்து,

6 அந்த மாளிகையை ரத்தினங்களால் அலங்கரித்தான்; பொன்னானது பர்வாயீமின் பொன்னாயிருந்தது.

7 அந்த மாளிகையின் உத்திரங்களையும், நிலைகளையும், அதின் சுவர்களையும், அதின் கதவுகளையும் பொன்தகட்டால் முடி, கொத்துவேலையால் சுவர்களிலே கேருபீன்களைச் செய்வித்தான்.

8 மகா பரிசுத்தமான ஆலயத்தையும் கட்டினான்; அதின் நீளம் ஆலயத்தினுடைய அகலத்தின்படி இருபதுமுழமும், அதின் அகலம் இருபதுமுழமுமாயிருந்தது; அதை அறுநூறு தாலந்து பசும்பொன்னினால் இழைத்தான்.

9 ஆணிகளின் நிறை ஐம்பது பொன்சேக்கலானது; மேல் அறைகளையும் பொன்னினால் இழைத்தான்.

10 அவன் மகா பரிசுத்தமான ஆலயத்திலே இரண்டு கேருபீன்களையும் சித்திரவேலையாய் உண்டுபண்ணினான்; அவைகளைப் பொன்தகட்டால் மூடினான்.

11 அந்தக் கேருபீன்களுடைய செட்டைகளின் நீளம் இருபது முழமானது; ஒன்றினுடைய ஒரு செட்டை ஐந்துமுழமாயிருந்து, ஆலயத்துச் சுவரைத் தொட்டது; மறுசெட்டை ஐந்துமுழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.

12 மற்றக் கேருபீனின் ஒரு செட்டையும் ஐந்துமுழமாயிருந்து, ஆலயத்துச்சுவரைத் தொட்டது, அதின் மறுசெட்டையும் ஐந்துமுழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது.

13 இப்படியே அந்தக் கேருபீன்களின் செட்டைகள் இருபதுமுழ விரிவாயிருந்தது, அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றது; அவைகளின் முகங்கள் ஆலயத்து உட்புறமாய் நோக்கியிருந்தது.

14 இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லியநூலாலும் திரையையும், அதிலே கேருபீன்களின் உருவங்களையும் உண்டுபண்ணினான்.

15 ஆலயத்திற்கு முன்னாக முப்பத்தைந்துமுழ உயரமான இரண்டுதூண்களையும், அவைகளுடைய முனைகளின்மேலிருக்கும் ஐந்துமுழ உயரமான கும்பங்களையும் உண்டாக்கி,

16 சந்நிதிக்கு முன்னிருக்கச் சங்கிலிகளையும் பண்ணி, தூண்களின் முனைகளின்மேல் பற்றவைத்து, நூறு மாதளம்பழங்களையும் பண்ணி அந்தச் சங்கிலிகளில் கோத்தான்.

17 அந்தத் தூண்களை அவன் தேவாலயத்திற்கு முன்பாக ஒன்றை வலதுபுறத்திலும் ஒன்றை இடதுபுறத்திலும் நாட்டி, வலதுபுறமானதற்கு யாகீன் என்றும், இடதுபுறமானதற்குப் போவாஸ் என்றும் பேரிட்டான்.