Deuteronomy 34 in Tamil
உபாகமம் 34
Please click a verse to start collecting
1 பின்பு மோசே மோவாபின் சமனான வெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறினான்; அப்பொழுது கர்த்தர் அவனுக்கு, தாண்மட்டுமுள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும்,
2 நப்தலி தேசம் அனைத்தையும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் தேசத்தையும், கடைசிச் சமுத்திரம்வரைக்குமுள்ள யூதா தேசம் அனைத்தையும்,
3 தென்புறத்தையும், சோவார்வரைக்குமுள்ள பேரீச்சமரங்களின் பட்டணம் என்னும் ஊர்முதற்கொண்டு எரிகோவின் பள்ளத்தாக்காகிய சமனான பூமியையும் காண்பித்தார்.
4 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: நான் உங்கள் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்ட தேசம் இதுதான், இதை உன் கண் காணும்படி செய்தேன்; ஆனாலும் அவ்விடத்திற்குக் கடந்துபோவதில்லை என்றார்.
5 அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான்.
6 அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம்பண்ணினார். இந்நாள்வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான்.
7 மோசே மரிக்கிறபோது நூற்றிருபதுவயதாயிருந்தான்; அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.
8 இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் சமனான வெளிகளில் மோசேக்காக முப்பது நாள் அழுதுகொண்டிருந்தார்கள்; மோசேக்காக அழுது துக்கங்கொண்டாடின நாட்கள் முடிந்தது.
9 மோசே நூனின் குமரனாகிய யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்தபடியினால் அவன் ஞானத்தின் ஆவினால் நிறையப்பட்டான்; இஸ்ரவேல் புத்திரர் அவனுக்குக் கீழ்ப்படிந்து, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
10 மோசே எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய தேசமனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர் அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும்,
11 அவன் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால்,
12 கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்.