Genesis 48 in Tamil
ஆதியாகமம் 48
Please click a verse to start collecting
1 அதற்குப்பின்பு, உம்முடைய தகப்பனாருக்கு வருத்தமாயிருக்கிறது என்று யோசேப்புக்குச் சொல்லப்பட்டது. அப்பொழுது அவன் தன் இரண்டு குமாரராகிய மனாசேயையும் எப்பீராயீமையும் தன்னோடேகூடக் கொண்டுபோனான்.
2 இதோ, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு உம்மிடத்தில் வந்திருக்கிறார் என்று யாக்கோபுக்குச் அறிவிக்கப்பட்டது; அப்பொழுது இஸ்ரவேல் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு, கட்டிலின்மேல் உட்கார்ந்தான்.
3 யாக்கோபு யோசேப்பை நோக்கி: சர்வவல்லமையுள்ள தேவன் கானான் தேசத்திலுள்ள லுூஸ் என்னும் இடத்தில் எனக்குத் தரிசனமாகி, என்னை ஆசீர்வதித்து:
4 நான் உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி, உன்னைப் பல ஜனக்கூட்டமாக்கி, உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தை நித்திய சுதந்தரமாகக் கொடுப்பேன் என்று என்னோடே சொன்னார்.
5 நான் உன்னிடத்தில் எகிப்துக்கு வருமுன்னே உனக்கு எகிப்துதேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர்; ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல, எப்பீராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள்.
6 இவர்களுக்குப்பின், நீ பெறும் பிள்ளைகள் உன்னுடையவர்கள்; அவர்கள் தங்கள் தங்கள் சகோதரருடைய பேரால் அழைக்கப்பட்டு அவர்களுக்குரிய சுதந்தரத்தில் பங்குபெறுவார்கள்.
7 நான் பதானைவிட்டு வருகையில், கானான் தேசத்தில் எப்பிராத்தாவுக்குக் கொஞ்சம் தூரம் இருக்கும்போது, வழியிலே ராகேல் என்னண்டையிலே மரணமடைந்தாள்; அவளை அங்கே பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணினேன் என்றான்.
8 இஸ்ரவேல் யோசேப்பின் குமாரரைப் பார்த்து: இவர்கள் யார் என்று கேட்டான்.
9 யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: இவர்கள் இவ்விடத்தில் தேவன் அருளின குமாரர் என்றான். அப்பொழுது அவன்: நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என் கிட்டக்கொண்டுவா என்றான்.
10 முதிர்வயதினால் இஸ்ரவேலின் கண்கள் மங்கலாயிருந்தபடியால், அவன் நன்றாய்ப் பார்க்கக் கூடாதிருந்தது. அவர்களை அவனண்டையிலே சேரப்பண்ணினான்; அப்பொழுது அவன் அவர்களை முத்தஞ்செய்து அணைத்துக்கொண்டான்.
11 இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் முகத்தைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை; ஆனாலும் இதோ, உன் சந்ததியையும் காணும்படி தேவன் எனக்கு அருள் செய்தார் என்றான்.
12 அப்பொழுது அவனுடைய முழங்கால்கள் நடுவே இருந்த பிள்ளைகளை யோசேப்பு பின்னிடப்பண்ணி, அவனுடைய முகத்துக்கு முன்பாகத் தரைமட்டும் குனிந்து வணங்கினான்.
13 பின்பு, யோசேப்பு அவ்விருவரையும் கொண்டுவந்து, எப்பிராயீமைத் தன் வலது கையினாலே இஸ்ரவேலின் இடது கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடதுகையினாலே இஸ்ரவேலின் வலதுகைக்கு நேராகவும் விட்டான்.
14 அப்பொழுது இஸ்ரவேல், மனமறிய, தன் வலதுகையை நீட்டி, இளையவனாகிய எப்பிராயீமுடைய தலையின்மேலும், மனாசே மூத்தவனாயிருந்தும், தன் இடதுகையை மனாசேயுடைய தலையின்மேலும் வைத்தான்.
15 அவன் யோசேப்பை ஆசீர்வதித்து: என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவனும், நான் பிறந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் என்னை ஆதரித்துவந்த தேவனும்,
16 எல்லாத் தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்ட தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக, என்பேரும் என் பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு என்பவர்களின் பேரும் இவர்களுக்கு இடப்படக்கடவது; பூமியில் இவர்கள் மிகுதியாய்ப் பெருகக்கடவர்கள் என்றான்.
17 தகப்பன் தன் வலதுகையை எப்பிராயீமுடைய தலையின்மேல் வைத்ததை யோசேப்பு கண்டு, அது தனக்குப் பிரியமில்லாதபடியால், எப்பீராயீமுடைய தலையின்மேல் இருந்த தன் தகப்பனுடைய கையை மனாசேயினுடைய தலையின்மேல் வைக்கும்படிக்கு எடுத்து:
18 என் தகப்பனே, அப்படியல்ல, இவன் மூத்தவன், இவனுடைய தலையின்மேல் உம்முடைய வலதுகையை வைக்கவேண்டும் என்றான்.
19 அவன் தகப்பனோ தடுத்து: அது எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும்; இவனும் ஒரு ஜனக்கூட்டமாவான், இவனும் பெருகுவான்; இவனுடைய தம்பியோ இவனிலும் அதிகமாய்ப் பெருகுவான்; அவனுடைய சந்ததியார் திரளான ஜனங்களாவார்கள் என்றான்.
20 இவ்விதமாக அவன் அன்றைத்தினம் அவர்களை ஆசீர்வதித்து: தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப்போலவும் ஆக்குவாராக என்று இஸ்ரவேலர் உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள் என்று சொல்லி, எப்பிராயீமை மனாசேக்கு முன்னே வைத்தான்.
21 பின்பு, இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: இதோ, நான் மரணமடையப்போகிறேன்; தேவன் உங்களோடே இருப்பார்; அவர் உங்கள் பிதாக்களின் தேசத்துக்கு உங்களைத் திரும்பவும் போகப்பண்ணுவார் என்றும்,
22 உன் சகோதரருக்குக் கொடுத்ததைப்பார்க்கிலும், நான் என் பட்டயத்தாலும், என் வில்லினாலும், எமோரியர் கையிலிருந்து சம்பாதித்த ஒரு நிலத்தை உனக்கு அதிகமான பங்காகக் கொடுத்தேன் என்றும் சொன்னான்.