Isaiah 17 in Tamil
ஏசாயா 17
Please click a verse to start collecting
1 தமஸ்குவின் பாரம். இதோ, தமஸ்குவானது நகரமாயிராமல் தள்ளப்பட்டு, பாழான மண்மேடாகும்.
2 ஆரோவேரின் பட்டணங்கள் பாழாய் விடப்பட்டு, மந்தைகளின் வெளியாயிருக்கும்; மிரட்டுவாரில்லாமல் அவைகள் அங்கே படுத்துக்கொள்ளும்.
3 அரண் எப்பிராயீமையும், ராஜாங்கம் தமஸ்குவையும் விட்டொழியும்; இஸ்ரவேல் புத்திரருடைய மகிமைக்குநேரிட்டதுபோல சீரியாவில் மீதியாயிருப்பவர்களுக்கும் நேரிடும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
4 அக்காலத்திலே யாக்கோபின் மகிமை குறைந்துபோம், அவனுடைய கொழுத்த தேகம் மெலிந்துபோம்.
5 ஒருவன் ஓங்கின பயிரை அரிந்து, தன் கையினால் கதிர்களை அறுத்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே கதிர்களைச் சேர்க்கிறதுபோலிருக்கும்.
6 ஆனாலும் ஒலிவமரத்தை உலுக்கும்போது நுனிக்கொம்பிலே இரண்டுமூன்று காய்களும் காய்க்கிற அதின் கிளைகளிலே நாலைந்து காய்களும் மீதியாயிருப்பதுபோல, அதிலே பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீதியாயிருக்குமென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
7 அக்காலத்திலே மனுஷன் தன் கைகளின் கிரியையாகிய பீடங்களை நோக்காமலும், தன் விரல்கள் உண்டுபண்ணின தோப்புவிக்கிரகங்களையும், சிலைகளையும் நோக்காமலும்,
8 தன்னை உண்டாக்கினவரையே நோக்குவான், அவன் கண்கள் இஸ்ரவேலின் பரிசுத்தரையே நோக்கிக்கொண்டிருக்கும்.
9 அக்காலத்திலே அவர்களுடைய அரணான பட்டணங்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு மீதியாய் வைக்கப்பட்ட தழையைப்போலவும், நுனிக்கொம்பைப்போலவுமாகி, பாழாய்க் கிடக்கும்.
10 உன் பெலமாகிய கன்மலையை நீ நினையாமல் உன் இரட்சிப்பாகிய தேவனை மறந்தாய்; ஆதலால் நீ நேர்த்தியான நாற்றுகளை நட்டாலும், அந்நிய தேசத்துக் கன்றுகளை வைத்தாலும்,
11 பகற்காலத்திலே உன் நாற்றை வளரவும் விடியற்காலத்திலே உன் விதையை முளைக்கவும் பண்ணினாலும், பலனைச் சேர்க்கும் நாளிலே துக்கமும் கடும்வேதனையுமே உங்கள் அறுப்பாயிருக்கும்.
12 ஐயோ! கடல்கள் கொந்தளிக்கிறதுபோல கொந்தளிக்கிற அநேக ஜனங்களின் திரளும், பலத்த தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைகிற ஜனக்கூட்டங்களின் அமளியும் உண்டாயிருக்கிறது.
13 ஜனக்கூட்டங்கள் திரளான தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைந்தாலும், அவர்களை அவர் அதட்டுவார்; அவர்கள் தூரமாய் ஓடிப்போவார்கள்; மலைகளிலே காற்றினால் பறக்கடிக்கிற பதரைப்போலவும், சுழல்காற்றிலே அகப்பட்ட துரும்பைப்போலவும் துரத்தப்படுவார்கள்.
14 இதோ, சாயங்காலத்திலே கலக்கமுண்டாகும், விடியற்காலத்துக்குமுன் அவர்கள் ஒழிந்துபோவார்கள்; இதுவே நம்மைக் கொள்ளையாடுகிறவர்களின் பங்கும், நம்மைச் சூறையாடுகிறவர்களின் வீதமுமாயிருக்கும்.