Isaiah 40 in Tamil
ஏசாயா 40
Please click a verse to start collecting
1 என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்;
2 எருசலேமுடன் பட்சமாய்ப்பேசி, அதின் போர்முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார்.
3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,
4 பள்ளமெல்லம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும்.
5 கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும் மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.
6 பின்னும் கூப்பிட்டுச் சொல்லென்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேனென்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது.
7 கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல்.
8 புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்லென்று உரைத்தது.
9 சீயோன் என்னும் சுவிசேஷகியே, நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு; எருசலேம் என்னும் சுவிசேஷகியே, நீ உரத்தசத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவனென்று கூறு.
10 இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தில் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது.
11 மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.
12 தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்?
13 கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்?
14 தமக்கு அறிவை உணர்த்தவும், தம்மை நியாயவழியிலே உபதேசிக்கவும் தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு விவேகத்தின்வழி அறிவிக்கவும், அவர் யாரோடே ஆலோசனைபண்ணினார்?
15 இதோ, ஜாதிகள் ஏற்றச்சாலில் தொங்கும் துளிபோலவும், தராசிலே படியும் தூசிபோலவும், எண்ணப்படுகிறார்கள்; இதோ, தீவுகளை ஒரு அணுவைப்போல் தூக்குகிறார்.
16 லீபனோன் எரிக்கும் விறகுக்குப் போதாது அதிலுள்ள மிருகஜீவன்கள் தகனபலிக்கும் போதாது.
17 சகல ஜாதிகளும் அவருக்கு முன்பாக ஒன்றுமில்லை, அவர்கள் சூனியத்தில் சூனியமாகவும், மாயையாகவும் எண்ணப்படுகிறார்கள்.
18 இப்படியிருக்க, தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்?
19 கன்னான் ஒரு சுரூபத்தை வார்க்கிறான், தட்டான் பொன்தகட்டால் அதை மூடி, அதற்கு வெள்ளிச்சங்கிலிகளைப் பொருந்தவைக்கிறான்.
20 அதற்குக் கொடுக்க வகையில்லாதவன் உளுத்துப்போகாத மரத்தைத்தெரிந்துகொண்டு, அசையாத ஒருசுரூபத்தைச் செய்யும்படி நிபுணனான ஒரு தச்சனைத் தேடுகிறான்.
21 நீங்கள் அறியீர்களா? நாங்கள் கேள்விப்படவில்லையா? ஆதிமுதல் உங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லையா? பூமி அஸ்திபாரப்பட்டதுமுதல் உணராதிருக்கிறீர்களா?
22 அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.
23 அவர் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார்.
24 அவர்கள் திரும்ப நாட்டப்படுவதுமில்லை, விதைக்கப்படுவதுமில்லை; அவர்களுடைய அடிமரம் திரும்பப் பூமியிலே வேர்விடுவதுமில்லை; அவர்கள்மேல் அவர் ஊதவே பட்டுப்போவார்கள்; பெருங்காற்று அவர்களை ஒரு துரும்பைப்போல் அடித்துக்கொண்டுபோம்.
25 இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார்.
26 உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும் அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.
27 யாக்கோபே, இஸ்ரவேலே: என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ சொல்வானேன்?
28 பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையே. அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது.
29 சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.
30 இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள்.
31 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைத்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.