Please click a verse to start collecting

1 உசியாவினுடைய குமாரனாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் என்னும் யூதாதேசத்து ராஜாவின் நாட்களிலே, ரேத்சீன் என்னும் சீரியாவின் ராஜாவும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் இஸ்ரவேலின் ராஜாவும் எருசலேமினால் யுத்தம்பண்ண வந்தார்கள், அவர்களால் அதைப் பிடிக்கக் கூடாமற்போயிற்று.

2 சீரியர் எப்பிராயீமைச் சார்ந்திருக்கிறார்களென்று தாவீதின் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டபோது, ராஜாவின் இருதயமும் அவன் ஜனத்தின் இருதயமும் காட்டிலுள்ள மரங்கள் காற்றினால் அசைகிறதுபோல் அசைந்தது.

3 அப்பொழுது கர்த்தர் ஏசாயாவை நோக்கி: நீயும் உன் மகன் சேயார்சூபுமாக வண்ணார் துறைவழியிலுள்ள மேற்குளத்து மதகின் கடைசிமட்டும் ஆகாசுக்கு எதிர்கொண்டுபோய்,

4 நீ அவனை நோக்கி: சீரியர் எப்பிராயீமோடும், ரெமலியாவின் மகனோடும் உனக்கு விரோதமாகத் துராலோசனை பண்ணி,

5 நாம் யூதாவுக்கு விரோதமாய்ப்போய், அதை நெருக்கி, அதை நமக்குள்ளே பங்கிட்டுக்கொண்டு, அதற்குத் தபேயாலின் குமாரனை ராஜாவாக ஏற்படுத்துவோம் என்று சொன்னதினிமித்தம்;

6 நீ பயப்படாமல் அமர்ந்திருக்கப் பார்; இந்த இரண்டு புகைகிற கொள்ளிக்கட்டைகளாகிய சீரியரோடே வந்த ரேத்சீனும், ரெமலியாவின் மகனும் கொண்ட உக்கிரக்கோபத்தினிமித்தம் உன் இருதயம் துவளவேண்டாம்.

7 கர்த்தராகிய ஆண்டவர்: அந்த ஆலோசனை நிலைநிற்பதில்லை, அதின்படி சம்பவிப்பதுமில்லை;

8 சீரியாவின் தலை தமஸ்கு, தமஸ்குவின் தலை ரேத்சீன்; இன்னும் அறுபத்தைந்து வருஷங்களிலே எப்பிராயீம் ஒரு ஜனமாயிராதபடிக்கு நொறுங்குண்டுபோம்.

9 எப்பிராயீமின் தலை சமாரியா, சமாரியாவின் தலை ரெமலியாவின் மகன்; நீங்கள் விசுவாசியாவிட்டால் நிலைபெறமாட்டீர்கள் என்று சொல் என்றார்.

10 பின்னும் கர்த்தர் ஆகாசை நோக்கி:

11 நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார்.

12 ஆகாசோ: நான் கேட்கமாட்டேன், நான் கர்த்தரைப் பரீட்சைசெய்யமாட்டேன் என்றான்.

13 அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ?

14 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.

15 தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயதுமட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார்.

16 அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே, நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும்.

17 எப்பிராயீம் யூதாவைவிட்டுப் பிரிந்த நாள்முதல் வராத நாட்களைக் கர்த்தர் உன்மேலும், உன் ஜனத்தின்மேலும், உன் பிதாவுடைய வம்சத்தின்மேலும், அசீரியாவின் ராஜாவினாலே வரப்பண்ணுவார்.

18 அந்நாட்களிலே, கர்த்தர் எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியா தேசத்திலிருக்கும் தேனீயையும் பயில்காட்டி அழைப்பார்.

19 அவைகள் வந்து ஏகமாய் வனாந்தரங்களின் பள்ளத்தாக்குகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும் எல்லா முட்காடுகளிலும், மேய்ச்சலுள்ள எல்லா இடங்களிலும் தங்கும்.

20 அக்காலத்திலே ஆண்டவர் கூலிக்குவாங்கின சவரகன் கத்தியினால், அதாவது, நதியின் அக்கரையிலுள்ள அசீரியா ராஜாவினால் தலைமயிரையும் கால்மயிரையும் சிரைப்பித்து தாடியையும் வாங்கிப்போடுவிப்பார்.

21 அக்காலத்தில் ஒருவன் ஒரு இளம்பசுவையும், இரண்டு ஆடுகளையும் வளர்த்தால்,

22 அவைகள் பூரணமாய்ப் பால்கறக்கிறபடியினால் வெண்ணெயைச் சாப்பிடுவான்; தேசத்தின் நடுவில் மீதியாயிருப்பவனெவனும் வெண்ணெயையும் தேனையுமே சாப்பிடுவான்.

23 அந்நாளிலே, ஆயிரம் வெள்ளிக்காசு பெறும் ஆயிரம் திராட்சச்செடியிருந்த நிலமெல்லாம் முட்செடியும் நெரிஞ்சிலுமாகும்.

24 தேசமெங்கும் முட்செடியும் நெரிஞ்சிலும் உண்டாயிருப்பதினால், அம்புகளையும் வில்லையும் பிடித்து அங்கே போகவேண்டியதாயிருக்கும்.

25 மண்வெட்டியால் கொத்தப்படுகிற மலைகள் உண்டே; முட்செடிகளுக்கும் நெரிஞ்சில்களுக்கும் பயப்படுவதினால் அவைகளில் ஒன்றிற்கும் போகக் கூடாமையினால், அவைகள் மாடுகளை ஓட்டிவிடுவதற்கும், ஆடுகள் மிதிப்பதற்குமான இடமாயிருக்கும் என்றான்.