Please click a verse to start collecting

1 சர்வவல்லவருக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க, அவரை அறிந்தவர்கள் அவர் நியமித்த நாட்களை அறியாதிருக்கிறதென்ன?

2 சிலர் எல்லைக் குறிப்புகளை ஒற்றி, மந்தைகளைப் பலாத்காரமாய்ச் சாய்த்துக்கொண்டுபோய் பட்சிக்கிறார்கள்.

3 தாய் தகப்பன் இல்லாதவர்களின் கழுதையை ஓட்டிக்கொண்டுபோய், விதவையின் மாட்டை ஈடாக எடுத்துக்கொள்ளுகிறார்கள்.

4 தேசத்தில் சிறுமைப்பட்டவர்கள் சுகமாய் ஒளித்துக்கொள்ளத்தக்கதாக எளிமையானவர்களை வழியைவிட்டு விலக்குகிறார்கள்.

5 இதோ, அவர்கள் காட்டுக்கழுதைகளைப்போல இரைதேட அதிகாலமே தங்கள் வேலைக்குப் புறப்படுகிறார்கள்; வனாந்தரவெளிதான் அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் ஆகாரம் கொடுக்கவேண்டும்.

6 துன்மார்க்கனுடைய வயலில் அவர்கள் அவனுக்காக அறுப்பு அறுத்து அவனுடைய திராட்சத் தோட்டத்தின் பழங்களைச் சேர்க்கிறார்கள்.

7 குளிரிலே போர்த்துக்கொள்ளுகிறதற்கு ஒன்றும் இல்லாததினால் வஸ்திரமில்லாமல் இராத்தங்கி,

8 மலைகளிலிருந்து வரும் மழைகளிலே நனைந்து, ஒதுக்கிடமில்லாததினால் கன்மலையிலே ஒண்டிக்கொள்ளுகிறார்கள்.

9 அவர்களோ தகப்பனில்லாத பிள்ளையை முலையைவிட்டுப் பறித்து, தரித்திரன் போர்த்துக்கொண்டிருக்கிறதை அடகுவாங்குகிறார்கள்.

10 அவனை வஸ்திரமில்லாமல் நடக்கவும், பட்டினியாய் அரிக்கட்டுகளைச் சுமக்கவும்,

11 தங்கள் மதில்களுக்குள்ளே செக்காட்டவும், தாகத்தவனமாய் ஆலையாட்டவும் பண்ணுகிறார்கள்.

12 ஊரில் மனுஷர் தவிக்கிறார்கள், குற்றுயிராய்க் கிடக்கிறவர்களின் ஆத்துமா கூப்பிடுகிறது; என்றாலும் தேவன் அதற்குக் குற்றமாக அவர்கள்மேல் சுமத்துகிறதில்லை.

13 அவர்கள் வெளிச்சத்துக்கு விரோதமாய் நடக்கிறவர்களின் கூட்டத்தார்; அவர்கள் அவருடைய வழிகளை அறியாமலும், அவருடைய பாதைகளில் தரிசிக்காமலும் இருக்கிறார்கள்.

14 கொலைபாதகன் பொழுது விடிகிறபோது எழுந்து சிறுமையும் எளிமையுமானவனைக் கொன்று, இராக்காலத்திலே திருடனைப்போல் திரிகிறான்.

15 விபசாரனுடைய கண் மாலைமயங்குகிற வேளைக்குக் காத்திருந்து, என்னை ஒரு கணம் காணமாட்டாதென்று முகத்தை மூடிக்கொள்ளுகிறான்.

16 அவர்கள் பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை இருட்டிலே கன்னமிடுகிறார்கள்; அவர்கள் வெளிச்சத்தை அறியார்கள்.

17 விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல இருக்கிறது; அப்படிப்பட்டவன் மரண இருளின் பயங்கரத்தோடு பழகியிருக்கிறான்.

18 நீரோட்டத்தைப்போல் தீவிரமாய்ப் போவான்; தேசத்தில் அவன் பங்கு சபிக்கப்பட்டுப் போகிறதினால் அவன் திராட்சத்தோட்டங்களின் வழியை இனிக் காண்பதில்லை.

19 வறட்சியும் உஷ்ணமும் உறைந்த மழையைப் பட்சிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளைப் பட்சிக்கும்.

20 அவனைப் பெற்ற கர்ப்பம் அவனை மறக்கும்; புழு திருப்திகரமாய் அவனைத் தின்னும்; அவன் அப்புறம் நினைக்கப்படுவதில்லை; அக்கிரமமானது பட்டமரத்தைப்போல முறிந்துவிழும்.

21 பிள்ளைபெறாத மலடியின் ஆஸ்தியைப் பட்சித்துவிட்டு, விதவைக்கு நன்மை செய்யாதேபோகிறான்.

22 தன் பலத்தினாலே வல்லவர்களைத் தன் பாரிசமாக்குகிறான்; அவன் எழும்புகிறபோது ஒருவனுக்கும் பிராணனைப்பற்றி நிச்சயமில்லை.

23 தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால், அதின்மேல் உறுதியாய் நம்பிக்கை வைக்கிறான்; ஆனாலும் அவருடைய கண்கள் அப்படிப்பட்டவர்களின் வழிகளுக்கு விரோதமாயிருக்கிறது.

24 அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து காணாமற்போய், தாழ்த்தப்பட்டு மற்ற எல்லாரைப்போலும் அடக்கப்படுகிறார்கள்; கதிர்களின் நுனியைப்போல அறுக்கப்படுகிறார்கள்.

25 அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி என் வார்த்தைகளை வியர்த்தமாக்கத்தக்கவன் யார் என்றான்.