Please click a verse to start collecting

1 அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:

2 தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.

3 அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்.

4 நீர் எனக்குச் செவிகொடும், அப்பொழுது நான் பேசுவேன்; நான் உம்மைக் கேள்விகேட்பேன், நீர் எனக்கு உத்தரவு சொல்லும்.

5 என் காதில் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.

6 ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்.

7 கர்த்தர் இந்த வார்த்தைகளை யோபோடே பேசினபின், கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல் நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை.

8 ஆதலால் நீங்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொண்டு, என் தாசனாகிய யோபினிடத்தில் போய், உங்களுக்காகச் சர்வாங்க தகனபலிகளை இடுங்கள்; என் தாசனாகிய யோபும் உங்களுக்காக வேண்டுதல் செய்வான்; நான் அவன் முகத்தைப் பார்த்து உங்களை உங்கள் புத்தியீனத்துக்குத் தக்கதாக நடத்தாதிருப்பேன்; என் தாசனாகிய யோபு பேசினதுபோல் நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை என்றார்.

9 அப்பொழுது தேமானியனான எலிப்பாசும் சூகியனான பில்தாதும் நாகமாத்தியனான சோப்பாரும் போய், கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடியே செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் யோபின் முகத்தைப் பார்த்தார்.

10 யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.

11 அப்பொழுது அவனுடைய எல்லாச் சகோதரரும் சகோதரிகளும், முன் அவனுக்கு அறிமுகமான அனைவரும் அவனிடத்தில் வந்து, அவன் வீட்டிலே அவனோடே போஜனம்பண்ணி, கர்த்தர் அவன்மேல் வரப்பண்ணின சகல தீங்கினிமித்தம் அவனுக்காக அங்கலாய்த்து அவனுக்கு ஆறுதல்சொல்லி, அவரவர் ஒவ்வொரு தங்கக்காசையும், அவரவர் ஒவ்வொரு பொன் ஆபரணத்தையும் அவனுக்குக் கொடுத்தார்கள்.

12 கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின.

13 ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள்.

14 மூத்த மகளுக்கு எமீமாள் என்றும், இரண்டாம் மகளுக்குக் கெத்சீயாள் என்றும், மூன்றாம் மகளுக்குக் கேரேனாப்புக் என்றும் பேரிட்டான்.

15 தேசத்தில் எங்கும் யோபின் குமாரத்திகளைப்போல் செளந்தரியமான பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்.

16 இதற்குப்பின்பு யோபு நூற்றுநாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.

17 யோபு நெடுநாளிருந்து, பூரணவயதுள்ளவனாய் மரித்தான்.