Please click a verse to start collecting

1 கர்த்தர் இஸ்ரவேலைச் சுற்றிலும் இருந்த அவர்களுடைய எல்லாச் சத்துருக்களாலும் யுத்தமில்லாபடிக்கு இளைப்பாறப்பண்ணி அநேகநாள் சென்றபின்பு, யோசுவா வயது சென்று முதிர்ந்தவனானபோது,

2 யோசுவா இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும், மற்ற எல்லாரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: நான் வயது சென்று முதிர்ந்தவனானேன்.

3 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்தச் சகல ஜாதிகளுக்கும் செய்த யாவையும் நீங்கள் கண்டீர்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணினார்.

4 பாருங்கள், யோர்தான் முதல் நான் நிர்மூலமாக்கினவைகளும், மேற்கிலுள்ள பெரிய சமுத்திரமட்டும் இன்னும் மீதியாயிருக்கிறவைகளுமான சகல ஜாதிகளின் தேசத்தையும் சீட்டுப்போட்டு; உங்களுக்கு, உங்கள் கோத்திரங்களுக்குத் தக்கதாய், சுதந்தரமாகப் பங்கிட்டேன்.

5 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் அவர்களுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு, உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, உங்கள் பார்வையினின்று அகற்றிப்போடுவார்.

6 ஆகையால் மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதைவிட்டு, வலதுபுறமாகிலும் இடதுபுறமாகிலும் விலகிப்போகாமல், அதையெல்லாம் கைக்கொள்ளவும் செய்யவும் நிர்ணயம் பண்ணிக்கொள்ளுங்கள்.

7 உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளோடு கலவாமலும், அவர்களுடைய தேவர்களின் பேரை நினையாமலும், அவைகளைக்கொண்டு ஆணையிடாமலும், அவைகளைச் சேவியாமலும், பணிந்துகொள்ளாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள்.

8 இந்நாள்மட்டும் நீங்கள் செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்டிருங்கள்.

9 கர்த்தர் உங்களுக்கு முன்பாகப் பெரியவைகளும் பலத்தவைகளுமான ஜாதிகளைத் துரத்தியிருக்கிறார்; இந்நாள்மட்டும் ஒருவரும் உங்களுக்கு முன்பாக நிற்கவில்லை.

10 உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர்தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார்.

11 ஆகையால், உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரும்படி, உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.

12 நீங்கள் பின்வாங்கிப்போய், உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளைச் சேர்ந்து, அவர்களோடே சம்பந்தம் கலந்து, நீங்கள் அவர்களிடத்திலும் அவர்கள் உங்களிடத்திலும் உறவாடினால்,

13 உங்கள் தேவனாகிய கர்த்தர் இனி இந்த ஜாதிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடமாட்டார் என்றும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகுமட்டும் அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும், உங்கள் விலாக்களுக்குச் சவுக்காகவும், உங்கள் கண்களுக்கு முள்ளுகளாகவும் இருப்பார்கள் என்றும் நிச்சயமாய் அறியுங்கள்.

14 இதோ, இன்று நான் பூலோகத்தார் எல்லாரும் போகிற வழியே போகிறேன்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை.

15 இப்பொழுதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே சொன்ன நல்ல காரியம் எல்லாம் உங்களிடத்திலே எப்படி நிறைவேறிற்றோ, அப்படியே, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய உடன்படிக்கையை நீங்கள் மீறி, அந்நிய தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்து கொள்ளுங்காலத்தில்,

16 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை நிர்மூலமாக்குமட்டும், கர்த்தர் உங்கள்மேல் சகல தீமையான காரியங்களையும் வரப்பண்ணுவார்; கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் பற்றியெரியும்; அவர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரமாய் அழிந்துபோவீர்கள் என்றான்.