Judges 14 in Tamil
நியாயாதிபதிகள் 14
Please click a verse to start collecting
1 சிம்சோன் திம்னாத்துக்குப் போய், திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு,
2 திரும்ப வந்து, தன் தாயையும் தகப்பனையும் நோக்கி: திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன்; அவளை எனக்குக் கொள்ள வேண்டும் என்றான்.
3 அப்பொழுது அவன் தாயும் அவன் தகப்பனும் அவனை நோக்கி: நீ போய், விருத்தசேதனமில்லாத பெலிஸ்தரிடத்தில் ஒரு பெண்ணைக் கொள்ளவேண்டியதென்ன? உன் சகோதரரின் குமாரத்திகளிலும், எங்கள் ஜனமனைத்திலும் பெண் இல்லையா என்றார்கள். சிம்சோன் தன் தகப்பனை நோக்கி: அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே எனக்குக் கொள்ளவேண்டும் என்றான்.
4 அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அறியாதிருந்தார்கள்; அக்காலத்திலே பெலிஸ்தர் இஸ்ரவேலை ஆண்டார்கள்.
5 அப்படியே சிம்சோனும் அவன் தாயும் தகப்பனும் திம்னாத்துக்குப் போகப் புறப்பட்டார்கள்; அவர்கள் திம்னாத் ஊர் திராட்சத்தோட்டங்கள்மட்டும் வந்தபோது, இதோ, கெர்ச்சிக்கிற பாலசிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது.
6 அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப் போட்டான்; ஆனாலும் தான் செய்ததை அவன் தன் தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.
7 அவன் போய் அந்தப் பெண்ணோடே பேசினான்; அவள் சிம்சோனின் கண்ணுக்குப் பிரியமாயிருந்தாள்.
8 சிலநாளைக்குப்பின்பு, அவன் அவளை விவாகம்பண்ணத் திரும்பிவந்து, சிங்கத்தின் உடலைப் பார்க்கிறதற்கு வழிவிலகிப் போனான்; இதோ, சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது.
9 அவன் அதைத் தன் கைகளில் எடுத்து, சாப்பிட்டுக்கொண்டே நடந்து, தன் தாய்தகப்பனிடத்தில் வந்து, அவர்களுக்கும் கொடுத்தான்; அவர்களும் சாப்பிட்டார்கள், ஆனாலும் தான் அந்தத் தேனைச் சிங்கத்தின் உடலிலே எடுத்ததை அவர்களுக்கு அறிவிக்கவில்லை.
10 அவன் தகப்பன் அந்தப் பெண் இருக்கும் இடத்தில் போனபோது, சிம்சோன் அங்கே விருந்துசெய்தான்; வாலிபர் அப்படிச் செய்வது வழக்கம்.
11 அவர்கள் அவனைக் கண்டபோது, அவனோடேகூட இருக்கும்படி முப்பது தோழரை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
12 சிம்சோன் அவர்களை நோக்கி: ஒரு விடுகதையை உங்களுக்குச் சொல்லுகிறேன்; அதை நீங்கள் விருந்துண்கிற ஏழுநாளைக்குள்ளே கண்டுபிடித்து எனக்கு விடுவித்தால், நான் உங்களுக்கு முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுப்பேன்.
13 அதை எனக்கு விடுவிக்காதே போனால், நீங்கள் எனக்கு முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: உன் விடுகதையைச் சொல்லு; நாங்கள் அதைக் கேட்கட்டும் என்றார்கள்.
14 அப்பொழுது அவன்: பட்சிக்கிறவனிடத்திலுருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது என்றான்; அந்த விடுகதை அவர்களால் மூன்று நாள்மட்டும் விடுவிக்கக் கூடாதே போயிற்று.
15 ஏழாம்நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதியைப் பார்த்து: உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம் பண்ணு; இல்லாவிட்டால் நாங்கள் உன்னையும் உன் தகப்பன் வீட்டையும் அக்கினியால் சுட்டெரித்துப்போடுவோம்; எங்களுக்குள்ளவைகளைப் பறித்துக்கொள்ளவா எங்களை அழைத்தீர்கள் என்றார்கள்.
16 அப்பொழுது சிம்சோனின் பெண்சாதி அவனுக்கு முன்பாக அழுது, நீ என்னை நேசியாமல் என்னைப் பகைக்கிறாய், என் ஜனங்களுக்கு ஒரு விடுகதையைச் சொன்னாய், அதை எனக்காவது விடுவிக்கவில்லையே என்றாள்; அதற்கு அவன்: இதோ, நான் என் தாய்தகப்பனுக்கும் அதை விடுவிக்கவில்லையே, உனக்கு அதை விடுவிப்பேனோ என்றான்.
17 விருந்துண்கிற ஏழுநாளும் அவள் அவன் முன்பாக அழுதுகொண்டே இருந்தாள்; ஏழாம்நாளிலே அவள் அவனை அலட்டிக்கொண்டிருந்தபடியால், அதை அவளுக்கு விடுவித்தான்; அப்பொழுது அவள் தன் ஜனங்களுக்கு அந்த விடுகதையை விடுவித்தாள்.
18 ஆகையால் ஏழாம்நாளிலே பொழுது போகுமுன்னே, அந்த ஊர் மனுஷர் அவனை நோக்கி, தேனைப்பார்க்கிலும் மதுரமானது என்ன, சிங்கத்தைப்பார்க்கிலும் பலமானதும் என்ன என்றார்கள்; அதற்கு அவன்: நீங்கள் என் கிடாரியால் உழாதிருந்தீர்களானால், என் விடுகதையைக் கண்டுபிடிப்பதில்லை என்றான்.
19 கர்த்தருடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவன் அஸ்கலோனுக்குப்போய், அவ்வூராரில் முப்பதுபேரைக்கொன்று, அவர்களுடைய வஸ்திரங்களை உரிந்துகொண்டுவந்து, விடுகதையை விடுவித்தவர்களுக்கு அந்த மாற்று வஸ்திரங்களைக் கொடுத்து, கோபம் மூண்டவனாய்ப் புறப்பட்டு, தன் தகப்பன் வீட்டுக்குப் போய்விட்டான்.
20 சிம்சோனின் பெண்சாதியோவென்றால், அவனுடைய தோழரில் அவனோடே சிநேகமாயிருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள்.