Psalm 106 in Tamil
சங்கீதம் 106
Please click a verse to start collecting
1 அல்லேலுூயா, கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர். அவர் கிருபை என்றுமுள்ளது.
2 கர்த்தருடைய வல்லமையான செய்கைகளைச் சொல்லி, அவருடைய துதியையெல்லாம் பிரஸ்தாபப்படுத்தத்தக்கவன் யார்?
3 நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும், எக்காலத்திலும் நீதியைச்செய்கிறவர்களும் பாக்கியவான்கள்.
4 கர்த்தாவே, நீர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நான் கண்டு உம்முடைய ஜாதியின் மகிழ்ச்சியால் மகிழ்ந்து, உம்முடைய சுதந்தரத்தோடே மேன்மைபாராட்டும்படிக்கு,
5 உம்முடைய ஜனங்களுக்கு நீர் பாராட்டும் கிருபையின்படி என்னை நினைத்து, உம்முடைய இரட்சிப்பினால் என்னைச் சந்தித்தருளும்.
6 எங்கள் பிதாக்களோடுங்கூட நாங்களும் பாவஞ்செய்து அக்கிரமம் நடப்பித்து, ஆகாமியம்பண்ணினோம்.
7 எங்கள் பிதாக்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும், உம்முடைய கிருபைகளின் திரட்சியை நினையாமலும் போய், சிவந்தசமுத்திர ஓரத்திலே கலகம்பண்ணினார்கள்.
8 ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி தம்முடைய நாமத்தினிமித்தம் அவர்களை இரட்சித்தார்.
9 அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று; தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார்.
10 பகைஞன் கைக்கு அவர்களை விலக்கி இரட்சித்து, சத்துருவின் கைக்கு அவர்களை விலக்கி மீட்டார்.
11 அவர்கள் சத்துருக்களைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனும் மீந்திருக்கவில்லை.
12 அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து, அவருடைய துதியைப் பாடினார்கள்.
13 ஆனாலும் சீக்கிரமாய் அவருடைய கிரியைகளை மறந்தார்கள்; அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திராமல்,
14 வனாந்தரத்திலே இச்சையுள்ளவர்களாகி, அவாந்தரவெளியிலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.
15 அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள் ஆத்துமாக்களிலோ இளைப்பை அனுப்பினார்.
16 பாளயத்தில் அவர்கள் மோசேயின்மேலும், கர்த்தருடைய பரிசுத்தனாகிய ஆரோனின்மேலும் பொறாமைகொண்டார்கள்.
17 பூமி பிளந்து தாத்தானை விழுங்கி, அபிராமின் கூட்டத்தாரை மூடிப்போட்டது.
18 அவர்கள் கூட்டத்தில் அக்கினிபற்றியெரிந்தது; அக்கினி ஜுவாலை துன்மார்க்கரை எரித்துப்போட்டது.
19 அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை நமஸ்கரித்தார்கள்.
20 தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.
21 எகிப்திலே பெரிய கிரியைகளையும், காமின் தேசத்திலே அதிசயங்களையும் சிவந்த சமுத்திரத்தண்டையிலே பயங்கரமானவைகளையும் செய்தவராகிய,
22 தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள்.
23 ஆகையால், அவர்களை நாசம்பண்ணுவேன் என்றார்; அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே அவர்களை அவர் அழிக்காதபடிக்கு அவருடைய உக்கிரத்தை ஆற்றும்பொருட்டு, அவருக்கு முன்பாகத் திறப்பின் வாயிலே நின்றான்.
24 அவருடைய வார்த்தையை விசுவாசியாமல், இச்சிக்கப்படத்தக்க தேசத்தை அசட்டைபண்ணினார்கள்.
25 கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல், தங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்.
26 அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே மடியவும், அவர்கள் சந்ததி ஜாதிகளுக்குள்ளே அழியவும்,
27 அவர்கள் பற்பல தேசங்களிலே சிதறடிக்கப்படவும், அவர்களுக்கு விரோதமாகத் தம்முடைய கையை எடுத்தார்.
28 அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டு, ஜீவனில்லாதவைக்கு இட்ட பலிகளைப் புசித்து,
29 தங்கள் கிரியைகளினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள்; ஆகையால் வாதை அவர்களுக்குள் புகுந்தது.
30 அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான்; அதினால் வாதை நிறுத்தப்பட்டது.
31 அது தலைமுறை தலைமுறையாக என்றென்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
32 மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; அவர்கள் நிமித்தம் மோசேக்கும் பொல்லாப்பு நடந்தது.
33 அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளில் பதறிப்பேசினான்.
34 கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடி, அவர்கள் அந்த ஜனங்களை அழிக்கவில்லை.
35 ஜாதிகளுடனே கலந்து, அவர்கள் கிரியைகளைக் கற்று;
36 அவர்களுடைய விக்கிரகங்களைச் சேவித்தார்கள்; அவைகள் அவர்களுக்குக் கண்ணியாயிற்று.
37 அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுக்காகப் பலியிட்டார்கள்.
38 அவர்கள் கானான்தேசத்து விக்கிரகங்களுக்குப் பலியிட்டு, தங்கள் குமாரர் குமாரத்திகளுடைய குற்றமில்லாத இரத்தத்தை சிந்தினார்கள்; தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது.
39 அவர்கள் தங்கள் கிரியைகளினால் அசுத்தமாகி தங்கள் செய்கைகளினால் சோரம்போனார்கள்.
40 அதினால் கர்த்தருடைய கோபம் தமது ஜனத்தின்மேல் மூண்டது; அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார்.
41 அவர்களை ஜாதிகளுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களுடைய பகைஞர் அவர்களை ஆண்டார்கள்.
42 அவர்களுடைய சத்துருக்கள் அவர்களை ஒடுக்கினார்கள்; அவர்களுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டார்கள்.
43 அநேகந்தரம் அவர்களை விடுவித்தார்; அவர்களோ தங்கள் யோசனையினால் அவருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்.
44 அவர்கள் கூப்பிடுதலை அவர் கேட்கும்போதோ, அவர்களுக்கு உண்டான இடுக்கத்தை அவர் கண்ணோக்கி,
45 அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து, தமது மிகுந்த கிருபையின்படி மனஸ்தாபப்பட்டு,
46 அவர்களைச் சிறைபிடித்த யாவரும் அவர்களுக்கு இரங்கும்படி செய்தார்.
47 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப்போற்றி, உம்மைத் துதிக்கிறதில் மேன்மைபாராட்டும்படி எங்களை இரட்சித்து, எங்களை ஜாதிகளிலிருந்து சேர்த்தருளும்.
48 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஜனங்களெல்லாரும்: ஆமென், அல்லேலுூயா என்பார்களாக.