Psalm 40 in Tamil
சங்கீதம் 40
Please click a verse to start collecting
1 கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.
2 பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,
3 நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்.
4 அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல் கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்.
5 என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச்சொல்லிமுடியாது; நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.
6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் செவிகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை.
7 அப்பொழுது நான்: இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது;
8 என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்.
9 மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்; என் உதடுகளை மூடேன், கர்த்தாவே, நீர் அதை அறிவீர்.
10 உம்முடைய நீதியை நான் என் இருதயத்திற்குள் மறைத்துவைக்கவில்லை; உமது சத்தியத்தையும் உமது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறேன்; உமது கிருபையையும் உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவியாதபடிக்கு நான் ஒளித்துவைக்கவில்லை.
11 கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடையாமற் போகப்பண்ணாதேயும்; உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது.
12 எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, என் அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்துபிடித்தது, நான் நிமிர்ந்துபார்க்கக் கூடாதிருக்கிறது, அவைகள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறது, என் இருதயம் சோர்ந்துபோகிறது.
13 கர்த்தாவே, என்னை விடுவித்தருளும்; கர்த்தாவே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.
14 என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு இலச்சையடைவார்களாக.
15 என்பேரில் ஆ ஆ! ஆ ஆ! என்று சொல்லுகிறவர்கள், தங்கள் வெட்கத்தின் பலனையடைந்து, கைவிடப்படுவார்களாக.
16 உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.
17 நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே, தாமதியாதேயும்.