Please click a verse to start collecting

1 சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.

2 கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்; அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர்.

3 படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்.

4 கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன்.

5 அவன் எப்பொழுது சாவான், அவன் பேர் எப்பொழுது அழியும்? என்று என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறார்கள்.

6 ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாய்ப் பேசுகிறான்; அவன் தன் இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, தெருவிலேபோய், அதைத் தூற்றுகிறான்.

7 என் பகைஞரெல்லாரும் என்மேலே ஏகமாய் முணுமுணுத்து, எனக்கு விரோதமாயிருந்து எனக்குப் பொல்லாங்கு நினைத்து,

8 தீராவியாதி அவனைப் பிடித்துக்கொண்டது; படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள்.

9 என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.

10 கர்த்தாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கப்பண்ணும்.

11 என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன்.

12 நீர் என் உத்தமத்திலே என்னைத்தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.

13 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென்.