Psalm 81 in Tamil
சங்கீதம் 81
Please click a verse to start collecting
1 நம்முடைய பெலனாகிய தேவனைக் கம்பீரமாய்ப் பாடி, யாக்கோபின் தேவனைக்குறித்து ஆர்ப்பரியுங்கள்.
2 தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து, சங்கீதம் பாடுங்கள்.
3 மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும், நம்முடைய பண்டிகைநாட்களிலும், எக்காளம் ஊதுங்கள்.
4 இது இஸ்ரவேலுக்குப் பிரமாணமும் யாக்கோபின் தேவன் விதித்த நியாயமுமாயிருக்கிறது.
5 நாம் அறியாத பாஷையைக் கேட்ட எகிப்துதேசத்தைவிட்டுப் புறப்படுகையில், இதை யோசேப்பிலே சாட்சியாக ஏற்படுத்தினார்.
6 அவன் தோளைச் சுமைக்கு விலக்கினேன்; அவன் கைகள் கூடைக்கு நீங்கலாக்கப்பட்டது.
7 நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய், நான் உன்னைத் தப்புவித்தேன்; இடிமுழக்கம் உண்டாகும் மறைவிடத்திலிருந்து உனக்கு உத்தரவு அருளினேன்; மேரிபாவின் தண்ணீர்களிடத்தில் உன்னைச் சோதித்து அறிந்தேன். (சேலா.)
8 என் ஜனமே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்; இஸ்ரவேலே, நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாயிருக்கும்.
9 உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்; அந்நிய தேவனை நீ நமஸ்கரிக்கவும் வேண்டாம்.
10 உன்னை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே; உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன்.
11 என் ஜனமோ என் சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை, இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை.
12 ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; தங்கள் யோசனைகளின்படி நடந்தார்கள்.
13 ஆ, என் ஜனம் எனக்குச் செவிகொடுத்து இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும்!
14 நான் சீக்கிரத்தில் அவர்கள் எதிராளிகளைத் தாழ்த்தி, என் கையை அவர்கள் சத்துருக்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்.
15 அப்பொழுது கர்த்தரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும்.
16 உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.