Psalm 89 in Tamil
சங்கீதம் 89
Please click a verse to start collecting
1 கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்.
2 கிருபை என்றென்றைக்கும் ஸ்திரப்பட்டிருக்கும்; உமது உண்மையை வானங்களிலே ஸ்தாபிப்பீர் என்றேன்.
3 என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடே உடன்படிக்கைபண்ணி என்தாசனாகிய தாவீதை நோக்கி:
4 என்றென்றைக்கும் உன் சந்ததியை நிலைப்படுத்தி, தலைமுறை தலைமுறையாக என் சிங்காசனத்தை ஸ்தாபிப்பேன் என்று ஆணையிட்டேன் என்றார். (சேலா.)
5 கர்த்தாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும் பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும்.
6 ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்?
7 தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர்.
8 சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்மைப்போல் வல்லமையுள்ள கர்த்தர் யார்? உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது.
9 தேவரீர், சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிறீர்.
10 நீர் ராகாபை வெட்டுண்ட ஒருவனைப்போல் ஒடுக்கினீர்; உமது வல்லமையான புயத்தினால் உம்முடைய சத்துருக்களைச் சிதறடித்தீர்.
11 வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்.
12 வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர், தாபோரும் எர்மோனும் உம்முடைய நாமம் விளங்கக் கெம்பீரிக்கும்.
13 உமக்கு வல்லமையுள்ள புயமிருக்கிறது; உம்முடைய கரம் பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகரம் உன்னதமானது.
14 நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.
15 கெம்பீரசத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள்; கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்.
16 அவர்கள் உம்முடைய நாமத்தில் நாடோறும் களிகூர்ந்து, உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்.
17 நீரே அவர்கள் பலத்தின் மகிமையாயிருக்கிறீர்; உம்முடைய தயவினால் எங்கள் கொம்பு உயரும்.
18 கர்த்தரால் எங்கள் கேடகமும் இஸ்ரவேலின் பரிசுத்தரால் எங்களுடைய ராஜாவும் உண்டு.
19 அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: சகாயஞ்செய்யத்தக்க சக்தியை ஒரு சவுரியவான்மேல் வைத்து, ஜனத்தில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன்.
20 என் தாசனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம்பண்ணினேன்.
21 என் கை அவனோடே உறுதியாயிருக்கும்; என் புயம் அவனைப் பலப்படுத்தும்.
22 சத்துரு அவனை நெருக்குவதில்லை; நியாயக்கேட்டின் மகன் அவனை ஒடுக்குவதில்லை.
23 அவன் சத்துருக்களை அவனுக்குமுன்பாக மடங்கடித்து, அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன்.
24 என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும், என் நாமத்தினால் அவன் கொம்பு உயரும்.
25 அவன் கையைச் சமுத்திரத்தின்மேலும், அவன் வலதுகரத்தை ஆறுகள்மேலும் ஆளும்படி வைப்பேன்.
26 அவன் என்னை நோக்கி: நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான்.
27 நான் அவனை எனக்கு முதற்பேறானவனும், பூமியின் ராஜாக்களைப்பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குவேன்.
28 என் கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என் உடன்படிக்கை, அவனுக்காக உறுதிப்படுத்தப்படும்.
29 அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், அவன் ராஜாசனம் வானங்களுள்ளமட்டும் நிலைநிற்கவும்செய்வேன்.
30 அவன் பிள்ளைகள் என் நியாயங்களின்படி நடவாமல் என் வேதத்தை விட்டு விலகி;
31 என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் என் நியமங்களை மீறிநடந்தால்;
32 அவர்கள் மீறுதலை மிலாற்றினாலும், அவர்கள் அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன்.
33 ஆனாலும் என் கிருபையை அவனைவிட்டு விலக்காமலும், என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன்.
34 என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதை மாற்றாமலும் இருப்பேன்.
35 ஒருவிசை என் பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், தாவீதுக்கு நான் பொய்சொல்லேன்.
36 அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்.
37 சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், ஆகாயமண்டலத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று விளம்பினீர். (சேலா.)
38 ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர், நீர் அபிஷேகம்பண்ணுவித்தவன்மேல் உக்கிரமானீர்.
39 உமது அடியானுடன் நீர் பண்ணின உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, அவன் கிரீடத்தைத் தரையிலேதள்ளி அவமானப்படுத்தினீர்.
40 அவன் மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு, அவன் அரணான ஸ்தலங்களைப் பாழாக்கினீர்.
41 வழிநடக்கிற யாவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்; தன் அயலாருக்கு நிந்தையானான்.
42 அவன் சத்துருக்களின் வலதுகையை நீர் உயர்த்தி, அவன் விரோதிகள் யாவரும் சந்தோஷிக்கும்படிசெய்தீர்.
43 அவன் பட்டயத்தின் கருக்கை மழுக்கிப்போட்டு, அவனை யுத்தத்தில் நிற்காதபடி செய்தீர்.
44 அவன் மகிமையை அற்றுப்போகப்பண்ணி, அவன் சிங்காசனத்தைத் தரையிலே தள்ளினீர்.
45 அவன் வாலிபநாட்களைக் குறுக்கி, அவனை வெட்கத்தால் மூடினீர். (சேலா.)
46 எதுவரைக்கும், கர்த்தாவே! நீர் என்றென்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல் எரியுமோ?
47 என் ஜீவன் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; மனுபுத்திரர் யாவரையும் வீணாகச் சிருஷ்டிக்க வேண்டியதென்ன?
48 மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா.)
49 ஆண்டவரே, நீர் தாவீதுக்கு உம்முடைய உண்மையைக்கொண்டு சத்தியம்பண்ணின உமது பூர்வ கிருபைகள் எங்கே?
50 ஆண்டவரே, உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஊழியக்காரரையும் நீர் அபிஷேகம்பண்ணினவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்,
51 கர்த்தாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையான ஜனங்களெல்லாராலும் நான் என் மடியில் சுமக்கும் என் நிந்தையையும் நினைத்தருளும்.
52 கர்த்தருக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக. ஆமென், ஆமென்.