Revelation 18 in Tamil
வெளிப்படுத்தின விசேஷம் 18
Please click a verse to start collecting
1 இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; இவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று.
2 அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று.
3 அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான்.
4 பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.
5 அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைவுகூர்ந்தார்.
6 அவள் உங்களுக்குப் பலனளித்ததுபோல நீங்களும் அவளுக்குப் பலனளியுங்கள்; அவளுடைய கிரியைகளுக்குத்தக்கதாக அவளுக்கு இரட்டிப்பாகக் கொடுத்துத் தீருங்கள்; அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்துகொடுங்கள்.
7 அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச்செருக்காய் வாழ்ந்ததெவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன்; நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக் காண்பதில்லையென்று அவள் தன் இருதயத்திலே எண்ணினாள்.
8 ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்.
9 அவளுடனே வேசித்தனஞ்செய்து செல்வச்செருக்காய் வாழ்ந்த பூமியின் ராஜாக்களும் அவள் வேகிறதினால் உண்டான புகையைக் காணும்போது அவளுக்காக அழுது புலம்பி,
10 அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகாநகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள்.
11 பூமியின் வர்த்தகர்களும் தங்கள் தங்கள் சரக்குகளாகிய பொன்னையும், வெள்ளியையும், இரத்தினங்களையும், முத்துக்களையும், சல்லாவையும், இரத்தாம்பரத்தையும், பட்டாடைகளையும், சிவப்பாடைகளையும்,
12 சகலவித வாசனைக் கட்டைகளையும், தந்தத்தினால் செய்திருக்கிற சகலவித வஸ்துக்களையும், விலையுயர்ந்த மரத்தினாலும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் வெள்ளைக் கல்லினாலும் செய்திருக்கிற சகலவித வஸ்துக்களையும்,
13 இலவங்கப்பட்டையையும், தூபவர்க்கங்களையும், தைலங்களையும், சாம்பிராணியையும், திராட்சரசத்தையும், எண்ணெயையும், மெல்லிய மாவையும் கோதுமையையும், மாடுகளையும், ஆடுகளையும், குதிரைகளையும், இரதங்களையும், அடிமைகளையும், மனுஷருடைய ஆத்துமாக்களையும் இனிக் கொள்வாரில்லாதபடியால், அவளுக்காக அழுது புலம்புவார்கள்.
14 உன் ஆத்துமா இச்சித்த பழவர்க்கங்கள் உன்னைவிட்டு நீங்கிப்போயின; கொழுமையானவைகளும் சம்பிரமமானவைகளும் உன்னைவிட்டு நீங்கிப்போயின; நீ அவைகளை இனிக் காண்பதில்லை.
15 இப்படிப்பட்டவைகளைக் கொண்டு வர்த்தகம்பண்ணி அவளால் ஐசுவரியவான்களானவர்கள் அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று;
16 ஐயையோ! சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே! என்று சொல்லி, அழுது துக்கிப்பார்கள்.
17 மாலுமிகள் யாவரும், கப்பல்களில் யாத்திரை பண்ணுகிறவர்கள் யாவரும், கப்பலாட்களும், சமுத்திரத்திலே தொழில்செய்கிற யாவரும் தூரத்திலே நின்று,
18 அவள் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து: இந்த மகா நகரத்திற்கொப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு,
19 தங்கள் தலைகள்மேல் புழுதியைப்போட்டுக்கொண்டு: ஐயையோ, மகா நகரமே! சமுத்திரத்திலே கப்பல்களையுடைய அனைவரும் இவளுடைய உச்சிதமான சம்பூரணத்தினால் ஐசுவரியவான்களானார்களே! ஒரு நாழிகையில் இவள் பாழாய்ப்போனாளே! என்று அழுது துக்கித்து ஓலமிடுவார்கள்.
20 பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். உங்கள் நிமித்தம் தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே! என்று தூதன் சொன்னான்.
21 அப்பொழுது, பலமுள்ள தூதனொருவன் பெரிய ஏந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகாநகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒருபோதும் காணப்படாமற்போகும்.
22 சுரமண்டலக்காரரும், கீதவாத்தியக்காரரும். நாகசுரக்காரரும், எக்காளக்காரருமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை; எந்தத் தொழிலாளியும் இனி உன்னிடத்தில் காணப்படுவதுமில்லை; ஏந்திரசத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை.
23 விளக்குவெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; மணவாளனும் மணவாட்டியுமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. உன் வர்த்தகர் பூமியில் பெரியோர்களாயிருந்தார்களே; உன் சூனியத்தால் எல்லா ஜாதிகளும் மோசம்போனார்களே.
24 தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது என்று விளம்பினான்.