Song of Solomon 1 in Tamil
உன்னதப்பாட்டு 1
Please click a verse to start collecting
1 சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு.
2 அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது.
3 உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
4 என்னை இழுத்துக்கொள்ளும் உமக்குப் பின்னே ஓடி வருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டுவந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப் பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
5 எருசலேமின் குமாரத்திகளே! கேதாரின் கூடாரங்களைப்போலவும் சாலொமோனின் திரைகளைப்போலவும், நான் கறுப்பாயிருந்தாலும் அழகாயிருக்கிறேன்.
6 நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாராதேயுங்கள்; வெய்யில் என்மேற்பட்டது; என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து என்னைத் திராட்சத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை.
7 என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்துதிரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன?
8 ஸ்திரீகளில் ரூபவதியே! அதை நீ அறியாயாகில், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.
9 என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூண்டிருக்கிற பரிகள் பவுஞ்சுக்கு உன்னை ஒப்பிடுகிறேன்.
10 ஆபரணாதிகள் பூண்ட உன் கன்னங்களும், ஆரங்கள் பூண்ட உன் கழுத்தும் அழகாயிருக்கிறது.
11 வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குப் பண்ணுவோம்.
12 ராஜா தமது பந்தியிலிருக்குந்தனையும் என்னுடைய நளததைலம் தன் வாசனையை வீசும்.
13 என் நேசர் எனக்கு என் ஸ்தனங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு.
14 என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சத்தோட்டங்களில் முளைக்கும் மருதோன்றிப் பூங்கொத்து.
15 என் பிரியமே! நீ ரூபவதி; நீ ரூபவதி; உன் கண்கள் புறாக்கண்கள்.
16 நீர் ரூபமுள்ளவர்; என் நேசரே! நீர் இன்பமானவர்; நம்முடைய மஞ்சம் பசுமையானது.
17 நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுருமரம், நம்முடைய மச்சு தேவதாருமரம்.